திருமண வரவேற்புக்கு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 6 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 9 June 2026

திருமண வரவேற்புக்கு சென்ற சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து 6 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயம்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை சென்றபோது, அவர்கள் பயணித்த சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே செவ்வாய்க்கிழமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சி மாவட்டம் காட்டூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் இளைய மகள் கவிதாவின் திருமணம் கடந்த 7-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சென்னை ஆவடியில் இன்று மாலை நடைபெறவிருந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மதியழகன் மற்றும் அவரது உறவினர்கள் என சுமார் 30 பேர் சுற்றுலா வேனில் பயணம் மேற்கொண்டனர்.

இந்த வேனை ஈரோடு மாவட்டம் காக்குலம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. வேன் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பில்லூர் கூட்டுச்சாலை பகுதியில் வந்தபோது, திடீரென சாலையைக் கடந்த இனோவா கார் மீது மோதுவதைத் தவிர்க்க ஓட்டுநர் வேனை வலதுபுறமாக திருப்பியுள்ளார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் நடுப்பகுதி தடுப்பைக் கடந்து எதிர்திசை சாலைக்குள் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்தவர்களில் 6 குழந்தைகள் உட்பட 25 பேர் படுகாயமடைந்தனர்.



விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த எடைக்கல் போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. விபத்தில் சேதமடைந்த வேனை அப்புறப்படுத்தும் பணியிலும் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக உறவினர்களுடன் மகிழ்ச்சியாக சென்ற பயணம் விபத்தில் முடிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

D.செல்வம் 
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 
தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad