கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மூலசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட எம்.எஸ். தக்கா பகுதியில் சாலை மின்விளக்குகள் செயல்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை கள்ளக்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக எம்.எஸ். தக்கா வழித்தடம் இருந்து வருகிறது. இந்த சாலையை தினமும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
![]() |
| இருள் சூழ்ந்து காட்சி அளிக்கும் எம்.எஸ். தக்கா பகுதி. |
குறிப்பாக இரவு நேரங்களில் சாலையில் போதிய வெளிச்ச வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். பல இடங்களில் மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் உள்ளதாகவும், சில இடங்களில் முற்றிலும் எரியாத நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துக்குள்ளாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்த பிரச்சினை குறித்து மூலசமுத்திரம் ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக எம்.எஸ். தர்காவிற்கு வருகை தரும் பக்தர்களும் இரவு நேரங்களில் சிரமத்தை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
எனவே, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பழுதடைந்த சாலை மின்விளக்குகளை உடனடியாக சீரமைத்து, தேவையான இடங்களில் புதிய மின்விளக்குகள் அமைக்க கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகமும், மூலசமுத்திரம் ஊராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அடிக்கடி புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை; விபத்து ஏற்படும் முன்பே நிர்வாகம் விழித்துக் கொண்டு சாலை விளக்குகளை சரிசெய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment