கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கெடிலம் ஜிஎஸ்டி சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட தோல் ஏற்றிச் சென்ற மினி டெம்போ மீது பின்னால் வந்த பார்சல் கண்டெய்னர் லாரி மோதி, இரு வாகனங்களும் சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இருந்து பதப்படுத்தப்பட்ட தோல்களை ஏற்றிக்கொண்டு திருவாரூர் நோக்கிச் சென்ற மினி டெம்போவை திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பசுபதி (21) ஓட்டி வந்தார். கெடிலம் பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது, டெம்போவை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு அவர் கீழே இறங்கி சென்றதாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து கேரளா நோக்கிச் சென்று கொண்டிருந்த பார்சல் கண்டெய்னர் லாரி, ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நின்றிருந்த மினி டெம்போவின் பின்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இந்த மோதலின் வேகத்தில் மினி டெம்போ மற்றும் கண்டெய்னர் லாரி ஆகிய இரு வாகனங்களும் சாலையின் இடதுபுறத்தில் இருந்த சுமார் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தன. விபத்தின் தாக்கத்தால் மினி டெம்போவில் ஏற்றிச் செல்லப்பட்டிருந்த பதப்படுத்தப்பட்ட தோல்கள் பள்ளம் மற்றும் சாலையோரப் பகுதிகளில் சிதறிக்கிடந்தன.
இந்த விபத்தில் கண்டெய்னர் லாரி ஓட்டுநரான செங்கத்தைச் சேர்ந்த இஷாந்த் (24) லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மினி டெம்போ ஓட்டுநர் வாகனத்தில் இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
சம்பவம் குறித்து தகவலறிந்த திருநாவலூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். தொடர்ந்து விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால் கெடிலம் ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பின்னர் போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுத்து போக்குவரத்தை சீரமைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.



No comments:
Post a Comment