டாரஸ் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஓட்டுநர் பலி 5 பேர் படுகாயம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 6 June 2026

டாரஸ் லாரி மீது தனியார் சொகுசு பேருந்து மோதி விபத்து ஓட்டுநர் பலி 5 பேர் படுகாயம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே விருத்தாசலம் மேம்பாலத்தில் டாரஸ் லாரியின் பின்புறம் தனியார் சொகுசு பேருந்து மோதிய கோர விபத்தில் பேருந்து ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

பொள்ளாச்சியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சென்னை அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவர் ஓட்டிச் சென்றார்.

 

இந்நிலையில், உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள விருத்தாசலம் மேம்பாலம் அருகே சென்றபோது, முன்னால் சேலத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி கோலமாவு ஏற்றிச் சென்ற டாரஸ் லாரியின் பின்புறத்தில் பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது.

 

இந்த விபத்தில் பேருந்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது. இடிபாடுகளில் சிக்கிய ஓட்டுநர் சுந்தரேசன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர்.

 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த உளுந்தூர்பேட்டை போலீசார் மற்றும் மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

மேலும், பேருந்தின் இடிபாடுகளில் சிக்கியிருந்த ஓட்டுநர் சுந்தரேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இந்த விபத்தால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

 

இவ்விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

டாரஸ் லாரியின் பின்புறம் சொகுசு பேருந்து மோதியதில் ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

D.செல்வம்

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்

தமிழக குரல்


No comments:

Post a Comment

Post Top Ad