சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உள்பேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு அங்காளம்மன் கோவிலில் நடைபெற்ற 1008 பால்குட விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கைலாசநாதர் திருக்கோவிலில் இருந்து 1008 பால்குட ஊர்வலம் தொடங்கியது. வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளங்கள் ஒலிக்க, பக்தர்கள் பக்தி கோஷங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த ஊர்வலத்தில் வேண்டுதலின் பேரில் வீடுகளில் பூஜை செய்து கொண்டு வந்திருந்த பால்குடங்களை ஏந்திய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். தேரோடும் வீதிகள் வழியாக பக்தி உற்சாகத்துடன் சென்ற ஊர்வலம் அங்காளம்மன் கோவிலை வந்தடைந்தது.
அங்கு பக்தர்கள் கொண்டு வந்த பால் மூலம் அங்காளம்மனுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை மற்றும் மகா ஆரத்தி நடைபெற்றது. அம்மனை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.
விழாவின் போது பக்தர் ஒருவருக்கு மிளகாய் தூள் அபிஷேகம் செய்து வினோதமான முறையில் வழிபாடு நடத்தப்பட்டதும் பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்த விழாவில் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரியை தரிசித்து அருள் பெற்றனர். விழாவையொட்டி கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் திரளால் நிரம்பி காணப்பட்டது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment