கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பு.கொணலவாடி கிராமத்தில் அமைந்துள்ள பழமையான அருள்மிகு பச்சைவாழியம்மன் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி நடைபெற்ற திருத்தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
பழமை வாய்ந்த இக்கோவிலின் ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை திருவிழா கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மன் உற்சவம் சிறப்பாக நடைபெற்றதுடன், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் மேளதாளங்கள் முழங்க, பக்தி கோஷங்களுடன் அம்மன் திருத்தேரில் எழுந்தருளச் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியதும், ஏராளமான பக்தர்கள் உற்சாகத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெண்கள், இளைஞர்கள், முதியோர் என அனைத்து தரப்பினரும் திரளாக கலந்து கொண்டு பக்தி பரவசத்தில் அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் இறுதி நிகழ்வாக இன்று மாலை தீமிதி திருவிழா நடைபெற உள்ளது.
விழாவையொட்டி பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை போலீசார் மற்றும் உள்ளூர் நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment