கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பா. கிள்ளனூர் கிராமத்தில் 60 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் இளம்பெண் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா. கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த வீரமணியின் மகள் அபிஷா (19), கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவிற்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்ற நிலையில், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரின் விவசாய கிணற்றில் இளம்பெண் சடலம் மிதந்ததை அவ்வழியாக சென்ற விவசாயி கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், கிணற்றில் இருந்தது அபிஷா என்பதைக் கண்டறிந்து கதறி அழுதனர்.
தகவலறிந்த களமருதூர் காவல் நிலைய போலீசார், தீயணைப்பு துறை வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றிலிருந்து இளம்பெண் சடலத்தை மீட்டனர். பின்னர் உடல் கூறு ஆய்வுக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக களமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment