உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு ஸ்ரீ அங்காளம்மன் மயான கொள்ளை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 16 February 2026

உளுந்தூர்பேட்டை பாளையப்பட்டு ஸ்ரீ அங்காளம்மன் மயான கொள்ளை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு.



உளுந்தூர்பேட்டை | பிப். 17:


உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள பாளையப்பட்டு ஸ்ரீ அங்காளம்மன் கோவில் மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. பத்து நாட்களாக நடைபெற்று வந்த ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான கொள்ளை இன்று பக்தி பரவசத்துடன் நடந்தது.


விழாவின் சிறப்பு நிகழ்வாக காளி, காட்டேரி, ரத்தக் காட்டேரி, கருப்பு காட்டேரி, பச்சைக் காளி, சிவப்பு காளி உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் பூசாரிகள் அலங்கரித்து, கோவிலிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக ஈடுகாட்டிற்கு ஊர்வலமாக சென்றனர். ஆக்ரோஷமாக ஆடியபடி வந்த காளி வேடத்தாரை வழியெங்கும் பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர்.


தங்கள்மீது பிடித்த பில்லி, சூனியம், துஷ்ட சக்திகள் நீங்கும் என்ற நம்பிக்கையுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள், காளி வேடமிட்ட பூசாரியரிடம் கத்தி மற்றும் முறத்தால் அடியெடுத்து ஆசி பெற்றனர். மேலும், சுடுகாட்டில் நடைபெற்ற நிகழ்வில் பக்தர்கள் கொண்டு வந்த கோழிகளை படையலிட்டு, சிலர் கடித்து வீசும் மரபு நிகழ்வும் இடம்பெற்றது. பின்னர் சுடுகாட்டில் மண்ணால் செய்யப்பட்ட பெரியாயை பல்வேறு பொருட்களால் அலங்கரித்து படையல் வைத்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. அங்கு பூசாரிகள் பக்தர்களுக்கு முறத்தால் அடித்து ஆசி வழங்கினர்.


இந்த மயான கொள்ளை திருவிழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


பக்தி உணர்வுடன் நடைபெற்ற இந்த மயான கொள்ளை விழா, பகுதி மக்களின் பாரம்பரிய நம்பிக்கைகளையும் கிராமிய ஆன்மிக மரபுகளையும் பிரதிபலிக்கும் வகையில் சிறப்பாக நிறைவுற்றது. 

No comments:

Post a Comment

Post Top Ad