உளுந்தூர்பேட்டை, பிப்.20:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கல் ரயில்வே கேட்டில் ஏற்பட்ட விபத்தால் இரண்டு முக்கிய விரைவு ரயில்கள் சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக தாமதமாகச் சென்றன. நேற்று இரவு வழக்கம்போல் மூடப்பட்டிருந்த பரிக்கல் ரயில்வே கேட்டை, அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத கார் எச்சரிக்கையை மீறி நேரடியாக மோதியதாக கூறப்படுகிறது. மோதியதில் கேட் சேதமடைந்தது. பின்னர் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தினால் அந்த வழித்தடத்தில் வந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் (நாகர்கோவில்–சென்னை) மற்றும் சேது எக்ஸ்பிரஸ் (சென்னை–ராமேஸ்வரம்) ஆகிய இரு முக்கிய ரயில்களும் பாதுகாப்பு காரணங்களால் கேட்டை கடக்க முடியாமல் அருகிலேயே நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்த ரயில்வே பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சேதமடைந்த கேட்டை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 45 நிமிடங்களுக்கு மேலாக நடைபெற்ற பணிக்குப் பிறகு கேட் தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதால், இரு ரயில்களும் முக்கால் மணி நேரம் தாமதமாக பயணத்தைத் தொடர்ந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக விருத்தாச்சலம் இரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கேட்டை சேதப்படுத்தி தப்பியோடிய காரை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டிருக்கும் போது அவற்றை மீறிச் செல்ல முயற்சிப்பது பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், பொதுமக்கள் பாதுகாப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என ரயில்வே துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
© தகடூர்குரல்.காம் | செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு : 9843 663 662
.jpg)
Se
ReplyDelete