உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தோல் இல்லா காலணி தொழிற்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தொடக்கம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 8 January 2026

உளுந்தூர்பேட்டை சிப்காட்டில் தோல் இல்லா காலணி தொழிற்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தொடக்கம்.


உளுந்தூர்பேட்டை, ஜன. 08:


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழில்பேட்டையில் அமைந்துள்ள தோல் இல்லா காலணி தொழிற்சாலையின் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் அ.ஜெ. மணிக்கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தனர்.


உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழில்பேட்டையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில், தைவான் நாட்டு நிதி உதவியுடன் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் இந்த தோல் இல்லா காலணி தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. தொழிற்சாலை முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தால், நேரடி மற்றும் மறைமுகமாக சுமார் 27 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொழிற்சாலையின் முதல் கட்ட கட்டுமான பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த மாதம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உளுந்தூர்பேட்டைக்கு நேரில் வந்து தொழிற்சாலையை ஆய்வு செய்து பணிகளின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் கட்ட கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.


இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடைந்த பின்னர் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கப்படும் என்றும், இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் முக்கிய இடத்தைப் பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.


இந்த நிகழ்ச்சியில் தொழிற்சாலை நிர்வாக இயக்குநர்கள், பொறியாளர்கள், தொழில் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad