உளுந்தூர்பேட்டை | ஜனவரி 09
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில், கொரியர் பார்சல் ஏற்றிச் சென்ற வாகனம் சாலையோர தடுப்பு கட்டையில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
திருப்பூரிலிருந்து சென்னைக்கு கொரியர் பார்சல்களை எடுத்துச் சென்ற வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் (40) என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலையில் சென்றுகொண்டிருந்த போது, முன்னால் சென்ற கார் திடீரென சர்வீஸ் சாலைக்கு திரும்பியதால், பின்னால் வந்த கொரியர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கட்டையில் மோதி, சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த விபத்தில் டிரைவர் பாலமுருகனுக்கு லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த எலவனாசூர்கோட்டை காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கவிழ்ந்த வாகனத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment