உளுந்தூர்பேட்டை அருகே தூக்க கலக்கத்தால் கண்டெய்னர் லாரி விபத்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 9 January 2026

உளுந்தூர்பேட்டை அருகே தூக்க கலக்கத்தால் கண்டெய்னர் லாரி விபத்து 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது – ஓட்டுநர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.


உளுந்தூர்பேட்டை | ஜனவரி 09:


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில், ஓட்டுநரின் தூக்க கலக்கத்தால் கட்டுப்பாட்டை இழந்த கண்டெய்னர் லாரி சாலையோரத்தில் உள்ள சிறுபாலம் அருகே அமைந்துள்ள சுமார் 20 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு கண்டெய்னர் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. லாரியை ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் ஜிஎஸ்டி சாலையில் வந்தபோது, ஓட்டுநருக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தால் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக தாறுமாறாக ஓடி, சிறுபாலம் அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.


இந்த விபத்தில் லாரி கடுமையாக சேதமடைந்தது. தகவலறிந்த திருநாவலூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, காயமடைந்த ஓட்டுநரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


விபத்து காரணமாக திருச்சி–சென்னை ஜிஎஸ்டி சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், ராட்சத இயந்திரங்களின் உதவியுடன் விபத்தில் சிக்கிய லாரியை மீட்டு, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் இணைந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இவ்விபத்து குறித்து திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad