உளுந்தூர்பேட்டை | ஜனவரி 09:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில், போக்குவரத்து வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உளுந்தூர்பேட்டையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியில் உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகள் உற்சாகமாக பங்கேற்றனர். பேரணியை உளுந்தூர்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணியில் மாணவிகள்,
-
இருசக்கர வாகனம் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டிய அவசியம்,
-
போக்குவரத்து விதிகளை கட்டாயம் பின்பற்றுதல்,
-
கைப்பேசி பேசிக்கொண்டே வாகனம் ஓட்டக்கூடாது,
-
குடிபோதையில் வாகனம் இயக்கக்கூடாது
என்பன உள்ளிட்ட சாலை பாதுகாப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணி, உழவர் சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது. மாணவிகள் எழுப்பிய விழிப்புணர்வு கோஷங்கள் பொதுமக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தன.
சாலை விபத்துகளை குறைத்து, பாதுகாப்பான போக்குவரத்தை உருவாக்குவதற்கு இத்தகைய விழிப்புணர்வு நடவடிக்கைகள் மிகுந்த பயனளிக்கும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment