உளுந்தூர்பேட்டை | ஜனவரி 09:
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்ற கார் ஒன்று, உளுந்தூர்பேட்டை அருகே புகைப்பட்டி பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஸ்பீட் பிரேக்கரில் மோதி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. விபத்தை நேரில் கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், ரெக்கவரி வாகனத்தின் உதவியுடன் விபத்தில் சிக்கிய காரை சாலையிலிருந்து அப்புறப்படுத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது, அந்த காரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர்.
சோதனையில்,
-
ஹான்ஸ் – 19 மூட்டைகள்
-
விமல் பாக்கு – 8 மூட்டைகள்
-
டோகோ இன குட்கா – 5 மூட்டைகள்
என மொத்தம் சுமார் 330 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, குட்கா பொருட்களுடன் அந்த காரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். விபத்துக்குப் பின்னர் காரில் வந்தவர்கள் தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அவர்கள் யார், குட்கா பொருட்கள் எங்கிருந்து எங்கு கடத்திச் செல்லப்பட்டன என்பது குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment