உளுந்தூர்பேட்டை – ஜனவரி 11
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எமதர்மன் வேடமிட்ட கலைஞர்கள் மூலம் சாலை பாதுகாப்பு விதிகளை எடுத்துரைக்கும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்து வந்தவர்களை கலைஞர்கள் வழிமறித்து தடுத்து நிறுத்தி, தலைக்கவசம் அணிவதன் அவசியம், விதிமுறைகளை மீறுவதால் ஏற்படும் உயிர் ஆபத்துகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.
மேலும், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகமாகவும், தலைக்கவசம் அணியாமலும் செல்லும்போது ஏற்படும் விபத்துகளால் குடும்பங்கள் சந்திக்க வேண்டிய துயர நிலையை எமதர்மன் வேட கலைஞர்கள் உணர்ச்சிபூர்வமாக விளக்கினர். இந்த கலை நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
இந்நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் மீனா குமாரி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் முத்துக்குமார் உள்ளிட்ட போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டு, போக்குவரத்து விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கப்பட்டன.
சாலை விபத்துகளை குறைத்து, உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலுடன் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நிறைவடைந்தது.

No comments:
Post a Comment