உளுந்தூர்பேட்டை, ஜன. 12:
தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் 6-ஆம் ஆண்டு சமத்துவ பொங்கல் விழா, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விமரிசையாக நடைபெற்றது. சமூகத்தில் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை வலியுறுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த விழா, இவ்வாண்டும் பொதுமக்களின் பெரும் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரமம்-ஐ சேர்ந்த அம்பா அவர்கள், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், உளுந்தூர்பேட்டை நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, நகர மன்ற துணைத் தலைவர் வைத்தியநாதன், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பெரி.செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, அனைவரும் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கல் அடுப்பேற்றி, சாதி, மத, சமூக வேறுபாடுகளைத் தாண்டி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். இதில் துப்புரவு பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, சமூக நல்லிணக்கம் மற்றும் சமத்துவத்தின் அவசியத்தை வெளிப்படுத்தினர்.
பொங்கல் பண்டிகை என்பது உழைக்கும் மக்களை போற்றும் திருவிழா என்றும், சமூகத்தின் அனைத்து தரப்பினரும் சமமாக இணைந்து கொண்டாட வேண்டிய பண்டிகை என்றும் விழாவில் பேசிய சிறப்பு அழைப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர். சமூக நல்லிணக்கத்தை வளர்க்கும் பணியில் பத்திரிகையாளர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாரம்பரிய முறையில் பொங்கல் சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்ட இந்த விழா, கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மக்களின் உற்சாக பங்கேற்புடன் நிறைவடைந்தது. சமத்துவத்தை வலியுறுத்தும் இந்த சமத்துவ பொங்கல் விழா, உளுந்தூர்பேட்டை பகுதியில் பொதுமக்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது.

No comments:
Post a Comment