திருநாவலூர், ஜன.13:
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மேட்டத்தூர், கிழக்கு மருதூர், ஆண்டிக்குழி, சேந்தநாடு, சேந்தமங்கலம், வானம்பட்டு உள்ளிட்ட ஊராட்சிகளில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்தல் பணிகளை வலுப்படுத்தும் வகையில் தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன.
இந்த கூட்டங்களுக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் பார்வையாளர் இரா. ஸ்ரீதரன் தலைமை தாங்கி, தேர்தல் பணிகள் குறித்து விரிவான வழிகாட்டுதல்களை வழங்கினார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பாக நிலை குழுக்கள் அமைத்தல், வாக்காளர்களுடன் நேரடி தொடர்பு, வீடு வீடாகச் சென்று திமுகவின் கொள்கைகள் மற்றும் அரசின் சாதனைகளை எடுத்துச் செல்லும் பணிகள் குறித்து அவர் விளக்கினார். ஒவ்வொரு பாகத்திலும் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
திருநாவலூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜி.ஆர். வசந்தவேல் முன்னிலை வகித்து, ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் தயாரிப்பு பணிகள் குறித்து எடுத்துரைத்தார். தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் வி.சு. வீரபாண்டியன், கே.ஆர். ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டு, பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள் மற்றும் பாக நிலை குழு உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டிய பொறுப்புகள், தேர்தல் கால அட்டவணை மற்றும் டிஜிட்டல் வழித் தொடர்பு பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
இந்த கூட்டங்களில் ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள், ஊராட்சி வாரியான பொறுப்பாளர்கள், பாக முகவர்கள், பாக டிஜிட்டல் முகவர்கள், பாக நிலை குழு உறுப்பினர்கள் மற்றும் திமுக உடன்பிறப்புகள் பெருந்திரளாக கலந்து கொண்டு, தேர்தல் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுவதாக உறுதி அளித்தனர். வாக்காளர்களின் நலன்களை முன்வைத்து, தலைமை வழங்கும் அறிவுறுத்தல்களை கடைபிடித்து, ஒற்றுமையுடன் தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
முடிவில், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய, ஒன்றிய முதல் பாக நிலை வரை ஒருங்கிணைந்த, கட்டுப்பாட்டான மற்றும் திட்டமிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment