உளுந்தூர்பேட்டையில் இருந்து கெடிலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஆட்டோ, தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி அதிவேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது. மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கி சாலையோரம் சிதறியது.
இந்த விபத்தில், ஆட்டோவில் பயணம் செய்த இருவர் பலத்த காயமடைந்தனர். சம்பவத்தை கண்ட அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த இருவரையும் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
விபத்து காரணமாக கெடிலம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த திருநாவலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீரமைத்து, சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
மேலும், இந்த விபத்து தொடர்பாக திருநாவலூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
.jpg)
No comments:
Post a Comment