கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை அடுத்த களமருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பவர், தனது நண்பர்களான மூன்று பேருடன் சேர்ந்து பிறந்தநாளைக் கொண்டாட உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். பின்னர் கொண்டாட்டம் முடிந்து, உளுந்தூர்பேட்டை–திருச்சி மெயின் சாலையில் காரில் களமருதூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, தனியார் திருமண மண்டபம் எதிரே, அவர்கள் சென்ற கார், கரூரிலிருந்து பாண்டிச்சேரி நோக்கிச் சென்ற மற்றொரு காரின் மீது மோதியது. மோதலின் வேகத்தில் கார் சாலையின் நடுக்கட்டையில் பாய்ந்து பலத்த விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரியாஸ் மற்றும் அவரது நண்பர்களான அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக்ராஜ் (21), சாகுல் ஹமீது (33), ரஜப் அலி (27) ஆகிய நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டு, காரில் சிக்கியிருந்தவர்களை வெளியே மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், நால்வரும் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment