கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: 4 மாதங்களில் விசாரணை முடிவு: ஐகோர்ட்டில் அரசு தகவல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 29 June 2024

கள்ளக்குறிச்சி கலவர வழக்கு: 4 மாதங்களில் விசாரணை முடிவு: ஐகோர்ட்டில் அரசு தகவல்.


'கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரம் தொடர்பான வழக்கு விசாரணை, நான்கு மாதத்தில் முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி, 2022 ஜூலை 13ல் மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் மரணத்துக்கு, பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக்கூறி, ஜூலை 17ல் போராட்டம் நடந்தது. பின், திடீரென வன்முறையாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விசாரிக்க, சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது.


இந்நிலையில், வழக்கு விசாரணையை வேறு புலன் விசாரணை செய்யும் அமைப்புக்கு மாற்றக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் மனுத்தாக்கல் செய்து உள்ளார். இந்த மனு, நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கலவரம் தொடர்பாக, 519 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். 166 பேரின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வக சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் தரப்பில், 'வாட்ஸாப் குழுக்கள் வாயிலாக கூட்டத்தை கூட்டிய திராவிடமணி என்பவரையும், உயிரிழந்த மாணவியின் தாயையும், இதுவரை போலீசார் விசாரிக்கவில்லை' என, குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, 'சம்பவம் நடந்து 2 ஆண்டுகளாகியும், இன்னும் அவர்களிடம் ஏன் விசாரிக்கவில்லை; நல்ல நாளுக்காக காத்திருக்கிறீர்களா; ஒருவேளை இருவருக்கும் எதிராக ஆதாரம் இருந்தால் வழக்கில் சேர்ப்பீர்களா?' என, நீதிபதி கேள்வி எழுப்பினார்.


இதற்கு, 'மொபைல் போன் ஆய்வக பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கிறோம். விசாரணை நான்கு மாதங்களில் முடிக்கப்படும். ஆதாரம் இருந்தால், இருவரும் வழக்கில் சேர்க்கப்படுவர். 'விசாரணையின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று, ஜூலை 3ம் தேதிக்கு வழக்கின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad