கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சேகோ' தொழிற்சாலை தேவை. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 29 June 2024

கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சேகோ' தொழிற்சாலை தேவை.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மரவள்ளி பயிர் அதிகம் அறுவடை செய்யப்படுவதால், 'சேகோ' தொழிற்சாலை அமைக்க வேண்டும் எனவிவசாயிகள் கோரிக்கை வைத்து பேசினர்.


கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் சசிகலா, நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நந்தகுமார், கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குநர் கண்ணன், மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் (பொ) மயில்வாகணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பேசியதாவது: போதிய மழையில்லாததால் செங்கனாங்கொல்லை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர் காய்ந்து விட்டது. இதனால் நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஜி.அரியூரில் மார்க்கெட் கமிட்டி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், கட்டுமான பணிகள் தொடங்க காலதாமதமாகிறது. ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க தாசில்தார் அளவிலேயே அனுமதி வழங்க வேண்டும்.


சொட்டுநீர் பாசனத்திற்கு மானியம் பெற்ற விவசாயிகள், 7 வருடத்திற்கு பிறகு மீண்டும் மானியம் பெற முடியும். ஆனால், 7 வருடத்திற்குள் சொட்டு நீர் பைப் சேதமடைகிறது. எனவே, 3 வருடத்திற்கு ஒரு முறை சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்க வேண்டும். கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்ட வேண்டும். சம்பா, சாகுபடிக்கு ஏற்ப போதுமான அளவு விதை, உரம் வழங்க வேண்டும்.


கால்நடைத்துறையில் மண்டல இணை இயக்குநர் அலுவலகம், நோய் புலனாய்வு பிரிவு, கால்நடைபெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி, சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை கள்ளக்குறிச்சிக்கு கொண்டு வர வேண்டும். மாவட்டத்தில் மரவள்ளி அதிகமாக விளைவிக்கப்படுவதாகல் 'சேகோ' தொழிற்சாலை கொண்டு வர வேண்டும். இதன் மூலம் படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைக்கும். கல்வராயன்மலையில் வேளாண்மை விரிவாக்க மையமும், கள்ளக்குறிச்சியில் மொத்த காய்கறி வியாபார சந்தையும் அமைக்க வேண்டும்.


போதுமான உலர்களம் இல்லாததால் பயிர்களை சாலையில் கொட்டி காய வைக்க வேண்டிய நிலை உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கரும்பு வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.கோமுகி அணை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு அகற்றி, துார்வார வேண்டும் உட்பட பல்வேறு புகார்கள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்து விவசாயிகள் பேசினர்.
 

முன்னதாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டார். 

No comments:

Post a Comment

Post Top Ad