பகண்டை கூட்டு சாலையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 28 April 2023

பகண்டை கூட்டு சாலையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா



பகண்டை கூட்டு சாலையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடக்க விழா

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்டு சாலையில் உள்ள ஊர்ப்புற நூலகத்துக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள், முதியோர், இல்லத்தரசிகள் பயன்பெறும் வகையில் வீடு தேடி சென்று புத்தகங்கள் வழங்கும் நூலக நண்பர்கள் திட்டம் மற்றும் உலக புத்தக தின விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, நூலகர் ஹஸினா பேகம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வாணாபுரம் ஊராட்சி செயலர் சேகர் நூலக நண்பர்கள் திட்டத்தை தொடங்கி வைத்து தன்னார்வலர்களுக்கு அடையாள அட்டை, பதிவேடுகள் மற்றும் நூலகப்பை ஆகியவற்றை வழங்கி தன்னார்வலர்களுக்கு நூலக நண்பர்கள் திட்டத்தின் நோக்கத்தையும் செயல் திட்டத்தை பற்றியும் விளக்கிப் பேசினார்.

இதில், நூலகத் தன்னார்வலர்கள் கோவிந்தராஜ், சசிகுமார், ராதா, செல்வி மேரி, அபிராமி மற்றும் தினக்கூலி பணியாளர் சிவகாமி, சமூக ஆர்வலர்கள் தினேஷ், விமல், பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் மாவட்ட மைய நூலகம், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் மற்றும் பகுதி நேர நூலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் நாளிதழ்கள் மற்றும் வரலாறு, கதை, கவிதை புத்தகங்கள், மத்திய-மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் இருக்கின்றன.

இதனால் மாணவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைத்து வயதினரும் நூலகத்துக்கு வருகின்றனர். அதேநேரம் மாற்றுத்திறனாளிகள், நூலகத்துக்கு வர இயலாத நிலையில் இருக்கும் முதியவர்கள், வீட்டு வேலையில் மூழ்கி கிடக்கும் பெண்கள் நூலகத்துக்கு வர முடியாத நிலை இருக்கிறது.

இதனால் புத்தக வாசிப்பு ஆர்வம் இருந்தும் அவர்களால் நூலகத்துக்கு வந்து விருப்பமான புத்தகங்களை வாசிக்க முடியவில்லை. இந்த குறையை போக்கும் வகையில் நூலக நண்பர்கள் திட்டம் தொடங்கப்படும் என சட்டசபை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் தன்னார்வலர்கள் நூலக நண்பர்களாக சேர்க்கப்படுகின்றனர்.  இந்த நூலக நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் 25 புத்தகங்கள் வழங்கப்படும்.

இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், பெண்களை தொடர்பு கொண்டு வீட்டுக்கு சென்று அவர்கள் விரும்பிய புத்தகங்களை வழங்குவார்கள். அதேபோல் நூலக நண்பர்களிடம் விரும்பிய புத்தகத்தை அவர்கள் கேட்டு பெறலாம்.

பின்னர் 15 நாட்கள் கழித்து நூலக நண்பர்கள் மீண்டும் வந்து புத்தகங்களை பெற்றுக்கொண்டு வேறு புத்தகத்தை வழங்குவார்கள். இதன்மூலம் நூலகத்துக்கு வர இயலாத நிலையில் இருப்போரின் வாசிப்பு ஏக்கம் தீரும். வீட்டில் பெரியவர்கள் புத்தகம் வாசிப்பதை பார்த்து, குழந்தைகளும் புத்தகம் வாசிக்க தொடங்குவார்கள். அதேபோல் நூலகத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் உயரும் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad