சின்னசேலம் அருகே குப்பை சேகரிப்பு நிலையமாக மாறி வரும் தேசிய நெடுஞ்சாலை
குப்பைகள் என்றதுமே நினைவுக்கு வருவது சுகாதார சீர்கேடு. ஆம் இதனால் தான் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டக்கூடாது,
அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே கொட்ட வேண்டும். அல்லது தரம்பிரித்து சேகரிக்க வரும் தூய்மைப்பணியாளரிடம் வழங்க வேண்டும் என அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகின்றன. பிரசாரம் ஒருபுறம் இருக்க இன்னொருபுறம் சேகரிக்கப்படும் குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் குவித்து வைத்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவது வேதனையாக உள்ளது.
சென்னை-சேலம் சாலை இதற்கு உதாரணமாக சின்னசேலம் ஒன்றியத்துக்குட்பட்ட கனியாமூர் கூட்டு சாலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையை கூறலாம். ஆம், இந்த சாலையின் குறுக்கே செல்லும் மயூரா ஆற்றிலும், சாலை ஓரத்திலும் உப்பளத்தில் உப்புகளை குவித்து வைப்பது போன்று, குப்பைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளதை காண முடிகிறது.
இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இது தேசிய நெடுஞ்சாலையா? அல்லது குப்பை சேகரிக்கும் நிலையமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு நிமிடத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பஸ் பயணிகளை முகம் சுழிக்க வைக்கிறது. நாற்றம் தாங்க முடியாமல் சிலர் மூக்கை பிடித்துக் கொண்டு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. வாகன ஓட்டிகள் அவதி இது ஒருபுறம் இருக்க குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை ஊராட்சி தூய்மை பணியாளர்கள் நெருப்பு மூட்டி எரிக்க விடுகின்றனர். இதனால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு அந்த பகுதியில் புகை மூட்டம் உருவாவதால் சாலையை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் திக்கு முக்காடுகின்றனர். எதிரே வாகனங்கள் வருவது தெரியாது என்பதால் அந்த பகுதியில் சிறிய அளவிலான விபத்துகள் நிகழ்ந்து வருகின்றன. பெரிய அளவிலான அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கடமை. அதேபோல் மயூரா ஆற்றில் குப்பைகளை கொட்டுவதால் தண்ணீர் மாசு அடைகிறது. இதை எல்லாம் தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாாிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் இடையே எழுகிறது.
இது குறித்து கனியாமூர் பகுதி மக்கள் கூறும்போது, வீதி வீதியாக சென்று கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது என பொதுமக்களுக்கு பலமுறை பிரசாரம் படுகிறது பொதுமக்களும் பொறுப்பை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் வாகன ஓட்டிகளும் தெரிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment