கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தின் 156-வது ஆண்டு தேர் பவனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது.
இந்த ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்விளக்குகள் மற்றும் அலங்காரத் தோரணங்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவையொட்டி இன்று மாலை புனித ஜெபமாலை மாதா தேர் வீதி உலா நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர், எறையூர் மற்றும் சுற்றுவட்டார முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களின் இறைபாடல்கள், ஜெபங்கள் மற்றும் ஆராதனைகளுடன் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கொடியேற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி திருஇருதய ஆண்டவர் பசிலிக்கா திருத்தல அதிபர் பங்குத்தந்தை பேரருட்திரு பிச்சமுத்து அவர்கள் சிறப்பு திருப்பலியுடன் விழா கொடியை ஏற்றி வைத்து பெருவிழாவை தொடங்கி வைத்தார். அப்போது ட்ரோன் கேமரா மூலம் வானில் இருந்து வண்ணக் காகிதங்கள் தூவி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ஜெபங்களில் ஈடுபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 30-05-2026 வெள்ளிக்கிழமை இரவு மாபெரும் தேர் பவனி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த திருவிழாவில் எறையூர், உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவ மக்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஆன்மிக பரவசத்துடன் வழிபட்டனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment