கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் மற்றும் பெரியகுப்பம் ஆகிய இரு கிராமங்களில் ஒரே நாளில் தெருநாய் ஒன்று வெறியாட்டம் நடத்தி, 3 சிறுமிகள் உட்பட 7 பேரை விரட்டி விரட்டி கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெரியகுப்பம் கிராமத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களை திடீரென அங்கு வந்த தெருநாய் ஒன்று தாக்கி கடித்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத தாக்குதலால் சிறுவர்கள் அலறியடித்து ஓடிய நிலையில், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து நாயை விரட்டி அடித்து அங்கிருந்து அகற்றினர்.
அதன்பின் அங்கிருந்து தப்பிச் சென்ற அதே நாய் அருகிலுள்ள சின்னகுப்பம் கிராமத்திற்குச் சென்று, அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளை விரட்டி கடித்துள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
நாய் கடியால் காயமடைந்த 7 பேரில் மூன்று சிறுமிகள் உட்பட நான்கு பேர் ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மற்றவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஒரே பகுதியில், ஒரே நாளில், ஒரே நாய் தொடர்ந்து ஏழு பேரை தாக்கி கடித்த சம்பவம் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment