தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மீண்டும் தொடங்கிய நிலையில், நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே பொதுமக்களிடமிருந்து 325 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நீண்டநாள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக சமர்ப்பித்தனர்.
மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் குறைகளை கவனமாக கேட்டறிந்தார். தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுக்களை உடனடியாக பரிசீலித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் பட்டா கோரிக்கை, முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, வீட்டு மனைப்பட்டா, குடிநீர் வசதி, சமூக நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மீண்டும் தொடங்கியதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்தனர். மேலும் இதுபோன்ற கூட்டங்கள் மூலம் மக்களின் கோரிக்கைகள் விரைந்து தீர்க்கப்படும் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment