கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு இந்தியாவின் பல மாநிலங்களுடன், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் திரளாக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது மரபாக இருந்து வருகிறது.
அரவானுக்கு தாலி கட்டிக் கொண்டு, மறுநாள் அரவான் களபலிக்குப் பின்னர் தாலியை அறுத்து, தங்கத் தாலியை இணைக் கோவிலுக்கு காணிக்கையாக செலுத்தி, வெண்ணிற ஆடை அணிந்து ஒப்பாரி வைத்து துக்கம் அனுசரிப்பது இவ்விழாவின் முக்கிய ஆன்மீக நிகழ்வாக கருதப்படுகிறது.
இந்த சடங்கின் இறுதியாக, திருநங்கைகள் தலைமுழுகி தூய்மைப்படுத்திக் கொள்ள கோயில் அருகே அமைந்துள்ள பாரம்பரிய புனித குளத்தில் நீராடுவது தொன்றுதொட்டு நடைபெற்று வரும் ஐதீகமாகும்.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இந்த குளம் முறையாக பராமரிக்கப்படாததால் பாசி படர்ந்து, குப்பைகள் தேங்கி, பயன்படுத்த முடியாத நிலையில் மாறியுள்ளது.
இதனால், திருநங்கைகள் புனித நீராடலை மேற்கொள்ள முடியாமல், அருகிலுள்ள விவசாய கிணறுகள் மற்றும் தனியார் நிலங்களில் தண்ணீர் தேடி அலைவதற்கு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது அவர்கள் ஆன்மீக நம்பிக்கைக்கும், மரபுக்கும் எதிரான அவலமாக மாறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் திருவிழா முன் நடைபெறும் ஆலோசனைக்கூட்டத்தில், கூவாகம் பஞ்சாயத்து நிர்வாகம் குளத்தை சீரமைத்து, பாசி நீரை அகற்றி, புதிய தண்ணீர் நிரப்புவதாக உறுதி அளித்து வருகிறது.
ஆனால் விழா நெருங்கும் போதெல்லாம் அந்த உறுதிமொழிகள் செயல்படுத்தப்படாமல் போவதாக திருநங்கைகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான இந்த சடங்கை முழுமையாக செய்ய முடியாமல் இருப்பது மன வேதனை அளிக்கிறது.
பல நாடுகளில் இருந்து வருகிறோம். ஆனால் எங்களுக்கு குளிப்பதற்கோ, தங்குவதற்கோ கூட அடிப்படை வசதிகள் இல்லை என திருநங்கைகள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
இந்த திருவிழா உலகம் முழுவதும் கவனம் பெறும் நிலையில், அதன் மையமாக விளங்கும் திருநங்கைகளுக்கே அடிப்படை வசதிகள் இல்லாதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பலர் நேர்த்திக்கடனை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மனக்கசப்புடன் திரும்பிச் செல்லும் நிலை தொடர்கதையாகி வருகிறது.
வரும் ஆண்டுகளிலாவது புனித குளத்தை முழுமையாக சீரமைத்து சுத்தமான தண்ணீர் நிரப்பி பாதுகாப்பான நீராடும் வசதிகள் செய்து தங்கும் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பதே உலகம் முழுவதிலிருந்தும் வரும் திருநங்கைகளின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.
உலகமே உற்று நோக்கும் இந்த திருவிழாவில், அதன் ஆன்மாவாக உள்ள திருநங்கைகளின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய கூவாகம் பஞ்சாயத்து மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?
என்ற கேள்வியுடன், பக்தர்களும் சமூக ஆர்வலர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்

No comments:
Post a Comment