கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, ரயில் பெட்டியின் படியில் அமர்ந்து பயணம் செய்த இரண்டு இளைஞர்கள் தூக்க கலக்கத்தில் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் பாலாஜி ஆகிய இருவரும், சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்குச் செல்ல சென்னை – கன்னியாகுமரி விரைவு ரயிலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.
ரயில் பயணத்தின் போது, இருவரும் பெட்டியின் படியில் அமர்ந்தபடி பயணம் செய்து வந்துள்ளனர். இந்நிலையில், அதிகாலை நேரத்தில் உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள செங்குறிச்சி ரயில் பாதை பகுதியில், தூக்க கலக்கத்தில் இருந்த அவர்கள் திடீரென சமநிலை இழந்து ரயிலிலிருந்து கீழே விழுந்தனர்.
இதில், பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிகாலை நேரத்தில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள், ரயில் பாதையில் கிடந்த சடலங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரயில்வே காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் விருத்தாசலம் ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர், உயிரிழந்த இருவரின் சடலங்களையும் மீட்டு, உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் பயணத்தின் போது பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் மீண்டும் வலியுறுத்துவதாக உள்ளது.

No comments:
Post a Comment