உளுந்தூர்பேட்டை, டிச.24:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் எய்ட்ஸ் நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் இன்று மாபெரும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை உளுந்தூர்பேட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) அசோகன் அவர்கள் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் மற்றும் தலைமை மருத்துவர் அன்புமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வின் அவசியம் குறித்து உரையாற்றினர். மேலும், எய்ட்ஸ் நோய் பரவும் விதங்கள், அதனைத் தடுக்கும் வழிமுறைகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக பொறுப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உளுந்தூர்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் ரவி தலைமையில் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு வழங்கினர். அதேபோல், உளுந்தூர்பேட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் விநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பெருமளவில் கலந்து கொண்டு, எய்ட்ஸ் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பேரணியில் பங்கேற்றனர்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதுடன், எய்ட்ஸ் நோயை குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகளை நீக்கி, சரியான தகவல்களை எடுத்துச் செல்லும் முக்கிய முயற்சியாக அமைந்தது. இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
.jpeg)
No comments:
Post a Comment