சங்கராபுரம் அருகே மாணவர்கள் திடீர் சாலை மறியல் - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 7 February 2023

சங்கராபுரம் அருகே மாணவர்கள் திடீர் சாலை மறியல்

சங்கராபுரம் அருகே அரசு பள்ளி வளாகத்தில் கோவில் கட்டுவதை தடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தொழுவந்தாங்கலில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று இந்த பள்ளிக்கு மாணவர்கள் வழக்கம்போல் சென்றனர். அப்போது பள்ளி வளாகத்தை ஆக்கிரமித்து அப்பகுதியை சேர்ந்த சிலர் புதிதாக கோவில் கட்டி வந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் உடனே தங்களது பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் கோவில் கட்டினால் இட நெருக்கடி ஏற்படும்.
 

மேலும் கோவிலில் விழா நடக்கும் சமயத்தில் எங்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே பள்ளி வளாகத்தில் கோவில் கட்டுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் அங்குள்ள கடுவனூர்-அத்தியூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.


பேச்சுவார்த்தை இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர் கூறுகையில் மாணவர்கள் படிக்கும் இடத்தில் கோவில் கட்டி வழிபாடு நடத்தினால் மாணவர்கள் வகுப்பறையில் படிக்கும்போது அவர்களின் கவனம் சிதறும். இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும். மேலும் இட நெருக்கடியும் ஏற்படும். எனவே மாணவர்களின் நலன் கருதி பள்ளி வளாகத்தில் கோவில் கட்டுவதை தடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து போலீசார், அங்கு கோவில் கட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் மாணவர்களின் பெற்றோரிடம், இந்த இடம் ஊராட்சிக்கு சொந்தமானது.


எனவே இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். அதனை ஏற்று மாணவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பரபரப்பும் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad