திருக்கோவிலூர் அருகே ரேஷன் பொருட்களை ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்தது.
அரகண்டநல்லூரில் இருந்து கண்டாச்சிபுரத்துக்கு ரேஷன் பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. பில்ராம்பட்டு அருகே பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிக மாற்றுப்பாதை வழியாக லாரி சென்றபோது எதிர்பாராதவிதமாக கவிந்தது. இதனால் லாரியில் இருந்த அரிசி மூட்டைகள் அனைத்தும் கீழே விழுந்து சிதறின. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த அரகண்டநல்லூர் போலீசார் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர்.
மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருக்கோவிலூரில் இருந்து பில்ராம்பட்டு வழியாக கண்டாச்சிபுரம் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. இதனால் பணிகள் நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுப்பாதை சரியான முறையில் அமைக்காத காரணத்தால் தினசரி விபத்துகள் நிகழ்ந்து வருகிறது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் தமிழக முதல்-அமைச்சருக்கு புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில் திருக்கோவிலூர்- கண்டாச்சிபுரம் சாலையில் நடைபெற்று வரும் பாலம் கட்டும் பணிகளுக்கான மாற்றுப் பாதைகள் முறையாக அமைக்கப்படாததால் தினசரி விபத்துக்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவனக்குறைவே காரணமாகும். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment