கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் அலை கடலென திரண்ட மக்கள்.
கள்ளக்குறிச்சி புத்தக கண்காட்சியில் அலை கடலென மக்கள் திரண்டனர். ஒரே நாளில் 50 ஆயிரம் பேர் குவிந்ததால் பரபரப்புடன் காணப்பட்டது
புத்தக கண்காட்சி
மாவட்ட நூலகத் துறை சார்பில் கல்லை புத்தகத்திருவிழா என்ற தலைப்பில் புத்தக கண்காட்சி கள்ளக்குறிச்சியில் உள்ள சென்னை பைபாஸ் திடலில் கடந்த 15-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் 100 புத்தக பதிப்பு அரங்குகள் அமைத்து புத்தகங்கள் காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள, பேச்சரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது.
கலை நிகழ்ச்சி
கண்காட்சியின் 11-வது நாளான நேற்று காலை 10.30 மணியளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான ஓவிய போட்டியும், மதியம் 2.30 மணிக்கு தமிழ் செம்மல் கல்லை கோவிந்தராஜன் தலைமையில் பேச்சரங்கம் நடைபெற்றது.
பின்னர் மதியம் 3.30 மணியளவில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சியும், மாலை 5.30 மணியளவில் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் பல்சுவை கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தொடர்ந்து மாலை 6 மணிக்கு செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் சிறப்புரையாற்றினார். இதையடுத்து இரவு 7 மணியளவில் வாழ்க்கையும், இலக்கியமும் என்ற தலைப்பில் கருத்தரங்கமும் அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு கள்ளக்குறிச்சி ஸ்டைல் டான்ஸ் குழுவினரின் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் ஏராளமான மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
விழாக்கோலம் நேற்று அரசு விடுமுறை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்தனர்.
மேலும் பொதுமக்களும் அதிக அளவில் வந்திருந்ததால் புத்தக கண்காட்சி விழாக்கோலம் பூண்டது. கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற அரங்க வளாகம் மற்றும் புத்தக அரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் பரபரப்புடன் காணப்பட்டது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டு ஏராளமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். புத்தக கண்காட்சி இன்று(திங்கட்கிழமை) முடிவடைகிறது.
செய்தியாளர்- க.சமியுல்லா
No comments:
Post a Comment