கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள குமாரமங்கலம் ஜி.எஸ்.டி சாலையில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சியில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரை மணிகண்டன் என்பவர் ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத்தடுமாறி, சாலையின் நடுவில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கட்டை மீது ஏறியது.
அதனைத் தொடர்ந்து எதிர்திசை சாலைக்குள் புகுந்த கார், பாண்டிச்சேரியில் இருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் சாலையின் நடுவே தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த கோர விபத்தில் காரிலும் பேருந்திலும் பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் சென்னை சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் நடுவே கவிழ்ந்து கிடந்த காரை அகற்றும் பணியில் போலீசார் மற்றும் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எலவனாசூர் கோட்டை போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment