டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகைப் போராட்டம்.. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 26 May 2026

டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி, 100க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகைப் போராட்டம்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கெடிலம் பகுதியில் உள்ள மாரனோடை சாலையில் 11688 என்ற எண் கொண்ட அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை குடியிருப்புகள் மத்தியிலும், பள்ளி மாணவர்கள் தினமும் சென்று வரும் பாதையிலும் இயங்கி வருவதால், அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், மதுபானக் கடைக்கு வருவோர் சிலர் குடிபோதையில் பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபடுவது, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பெண்கள் குற்றம்சாட்டினர். மேலும், கடை செயல்பட்டு வரும் பகுதி முழுவதும் திருட்டு, கொள்ளை, தகராறு போன்ற சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீரென ஒன்று திரண்டு மதுபானக் கடையை திறக்க விடாமல் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் கடை முன்பு தரையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், கடையை நிரந்தரமாக அகற்றும் வரை போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் உறுதியாக தெரிவித்தனர்.


போராட்டம் குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை டி.எஸ்.பி அசோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டும் இருந்தனர். இருப்பினும், “கடை அகற்றப்படும் வரை கலைந்து செல்ல மாட்டோம்” என பெண்கள் உறுதியாக தெரிவித்ததால் பேச்சுவார்த்தை நீடித்தது.


மேலும், விழுப்புரம் சரக டாஸ்மாக் மண்டல மேலாளருடனும் போலீசார் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராட்டம் நீடித்து வருவதால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad