விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் வெளிநடப்பு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.. - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 May 2026

விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் வெளிநடப்பு கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..

 


கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டத்தில், அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் தமிழ்நாடு அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, விவசாய சங்க பிரதிநிதிகள் எழுந்து நின்று, “தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் நிபந்தனையின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்” என வலியுறுத்தி கோரிக்கை முன்வைத்தனர்.


இதற்கு உடனடி உறுதியான பதில் வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த விவசாயிகள், தமிழ்நாடு அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி குறைதீர்ப்பு கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வாயில் பகுதியில் திரண்டு நின்று போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.


போராட்டத்தில் பேசிய தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் டி. ஏழுமலை கூறுகையில்,

“தொடர் வறட்சி, பருவம் தவறிய மழை, விவசாய இடுபொருட்களின் கடும் விலை உயர்வு ஆகிய காரணங்களால் விவசாயம் கடுமையான நஷ்டத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் வாங்கிய பயிர்க்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்தால் மட்டுமே விவசாயிகள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்” என்றார்.


போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை அதிகாரிகள் சமரசம் செய்து அமைதிப்படுத்த முயன்றாலும், விவசாயிகள் தங்களது கோரிக்கையில் உறுதியாக இருந்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர்.


இந்த போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.வி. ஸ்டாலின்மணி, மாவட்ட தலைவர் டி. ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் ஜி. அருள்தாஸ், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் எஸ். ஜோதிராமன், உளுந்தூர்பேட்டை வி.ச. ஒன்றிய செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


விவசாயிகள் திடீர் வெளிநடப்பு மற்றும் போராட்டத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.


D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad