உளுந்தூர்பேட்டை அருகே விபத்து லாரி மீது மோதிய இருசக்கர வாகனம் இளைஞர் பலி, ஒருவர் படுகாயம். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 5 April 2026

உளுந்தூர்பேட்டை அருகே விபத்து லாரி மீது மோதிய இருசக்கர வாகனம் இளைஞர் பலி, ஒருவர் படுகாயம்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நடைபெற்ற சாலை விபத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடி பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டது. செங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த 28 வயதான பிரவீன்குமார் மற்றும் 18 வயதான காளீஸ்வரன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டையிலிருந்து தங்கள் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கி சென்ற லாரி ஒன்று இயந்திர கோளாறு காரணமாக சாலையோரத்தில் நின்றிருந்தது. இதனை கவனிக்காமல் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம், லாரியின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த பிரவீன்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காளீஸ்வரன் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடித்த நிலையில், அருகிலிருந்தவர்கள் உடனடியாக சுங்கச்சாவடி ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்தால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 
தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad