கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டியார் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு சிறப்புரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய ஸ்ரீதர் வாண்டியார், “தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு ஒரே அலை வீசுகிறது. அது எடப்பாடி அலை. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மைக் எடுத்துப் பேசினாலே அனைத்து விஷயங்களையும் தெளிவாக விளக்குகிறார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் முதலமைச்சராக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறார். அதை கேட்கும் போது மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள், எனக் கூறினார்.
மேலும் அவர், அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் பலனை தற்போது திமுக அரசு அறுவடை செய்து வருகிறது. குறிப்பாக, எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய கடன்களை தள்ளுபடி செய்தார். ஆனால் திமுக அரசால் கூட்டுறவு கடன்களை கூட தள்ளுபடி செய்ய முடியவில்லை. மீண்டும் எடப்பாடி ஆட்சிக்கு வந்தால், விவசாய கடன்கள், கூட்டுறவு கடன்கள் மற்றும் கல்விக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என உறுதி அளித்துள்ளார், என்றார்.
அவர் தொடர்ந்து, இதனால் தான் எங்கு பார்த்தாலும் எடப்பாடி அலை வீசுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்யும் போது என்னிடம் கார் இல்லை, பத்தாயிரம் ரூபாய் மட்டுமே உள்ளது’ என கூறுகிறார். இதை மக்கள் ஏற்க முடியாது. ஒருபுறம் உதயநிதி தனியார் சினிமா நிறுவனம் நடத்துகிறார், மறுபுறம் குடும்பத்தினர் ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் கூறும் இந்த தகவல்கள் நம்பிக்கைக்குரியதாக இல்லை, என விமர்சித்தார்.
மேலும், திமுகவுக்கு வாக்களித்தால் மத்திய அரசிடமிருந்து எந்த விதமான நிதியும் தமிழகத்திற்கு வராது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுக்கு வாக்களித்தால் மத்திய அரசின் முழு ஒத்துழைப்பும் கிடைத்து, தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும், என்று கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த கூட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் தேர்தல் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment