கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் குமரகுரு, உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இந்நிலையில், கூ.கள்ளக்குறிச்சி, ஆரிநத்தம், நல்லாளகுப்பம், மதியனூர், நைனாகுப்பம், நகர், மன்னார்குடி உள்ளிட்ட பல கிராமங்களில் அவர் வாக்கு சேகரிப்பு மேற்கொண்டார். ஒவ்வொரு கிராமத்திலும் அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பட்டாசுகள் வெடித்து, மலர்கள் தூவி, மாலை அணிவித்து வேட்பாளர் குமரகுருவை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட பெண்கள் பச்சை நிற புடவைகள் அணிந்து, இரட்டை இலை சின்னம் பதிக்கப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறு அணிவகுத்து வந்து, பூக்கள் தூவி மற்றும் மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளித்தது குறிப்பிடத்தக்கது.
இன்று தனது பிரச்சாரத்தை கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தில் பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து தொடங்கிய குமரகுரு, பின்னர் வீதி வீதியாக சென்று பொதுமக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு ஆதரவு திரட்டினார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் சாதனைகள் மீண்டும் தொடர வேண்டுமெனில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இப்பகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆறு மாதங்களுக்குள் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று, வீடு வீடாக சந்தித்து குமரகுரு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.

No comments:
Post a Comment