கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இன்று மிக விமரிசையாக 1008 காவடி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் அலகுகள், தேர், பால்குடங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான காணிக்கைகளை ஏந்தி, பக்தி உணர்வுடன் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். வேல் வேல் முருகா என்ற கோஷங்கள் முழங்க, பக்தர்கள் ஆனந்தமுடன் பாடல்கள் பாடியும், இசைக்கருவிகள் ஒலியிலும் கலந்து கொண்டனர்.
அதிகாலை முதலே திரளான பக்தர்கள் திருக்கோவிலில் திரண்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளில் பங்கேற்றனர். பின்னர் தொடங்கிய காவடி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, இறுதியாக தண்டாயுதபாணி திருக்கோவிலில் அடைந்தது.
இந்த திருவிழாவை முன்னிட்டு போலீசார் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டிருந்தனர். போக்குவரத்து ஒழுங்குபடுத்தப்பட்டதுடன், பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
D. செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்.
தமிழக குரல்.

No comments:
Post a Comment