தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விரிவான கள ஆய்வை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக, ரூ.140 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் ரூ.1,774 கோடி மதிப்பில் நிறைவடைந்த பல்வேறு வளர்ச்சி பணிகளை திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு அரசு துறைகள் சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாத்தனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு வரும் தோல்யில்லா காலணி தொழிற்சாலை கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தைவான் நாட்டைச் சேர்ந்த Pou Chen Group நிறுவனம் சார்பில் ரூ.2,302 கோடி முதலீட்டில், 200 ஏக்கர் பரப்பளவில் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இந்த தொழிற்சாலை முழுமையாக செயல்படத் தொடங்கிய பின்னர், சுமார் 27,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் 50 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பணிகளின் முன்னேற்றத்தை முதலமைச்சர் விரிவாக ஆய்வு செய்தார்.
அங்கு வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையின் மாதிரி வடிவமைப்பையும் பார்வையிட்ட முதலமைச்சர், உற்பத்தி திறன், தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்து நிறுவன அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, ஐந்து நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் வழங்கினார். பணி நியமன ஆணைகள் பெற்றவர்கள் கோகுல்நாத், ஸ்வேதா, சுல்தானா, பரமேஸ்வரி மற்றும் ஜெகன் ஆகியோர் ஆவர்.
இந்த ஆய்வின்போது தமிழக அமைச்சர்கள் டி.ஆர்.பி. ராஜா, எ.வ. வேலு, சி.வெ. கணேசன், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பௌசென் நிறுவனத்தின் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இந்த தோல்யில்லா காலணி தொழிற்சாலை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சிக்கும், உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment