உளுந்தூர்பேட்டை | டிசம்பர் 29:
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் மின்வாரியப் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றும் மின்வாரிய பணியாளர்களுக்கான பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சியில், உளுந்தூர்பேட்டை மின்வாரிய உதவி செயற் பொறியாளர் சிவராமன் அய்யம்பெருமாள் கலந்து கொண்டு, மின்பணிகளை பாதுகாப்பாக மேற்கொள்வது குறித்தும், விபத்துகளைத் தவிர்க்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கினார்.
மின்பாதைகளில் பணியாற்றுவதற்கு முன் மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்த பிறகே பணியை தொடங்க வேண்டும் என்றும், எர்த்ராடுகள், பாதுகாப்பு கையுறைகள், இடுப்பு கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், மின் விநியோகம் தொடர்பாக பெறப்படும் புகார்களை உடனடியாக ஆய்வு செய்து, துரிதமாக சரிசெய்து மின் நுகர்வோருக்கு சிறந்த சேவை வழங்க வேண்டும் எனவும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்த பாதுகாப்பு பயிற்சியில் மின்பாதை ஆய்வாளர்கள் அறிவழகன், அருள் பிரகாசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கம்பியாளர்கள் ரமேஷ், அசோக்குமார், சண்முகம், அய்யாதுரை, சீனிவாசன், செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, உளுந்தூர்பேட்டை உப கோட்டத்திற்கு உட்பட்ட நகரம் உளுந்தூர்பேட்டை, கிராமிய மேற்கு உளுந்தூர்பேட்டை, செங்குறிச்சி, சேந்தநாடு ஆகிய பிரிவு அலுவலகங்களிலும் இதேபோன்று பாதுகாப்பு பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்த பயிற்சிகள் உதவி பொறியாளர்கள் முருகன், அம்சலட்சுமி, முரளி மற்றும் செந்தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றன.

No comments:
Post a Comment